சிம்பாப்வே நாட்டின் அனுபவம்
ஒரு நாட்டின் பணவீக்கம் 10 அல்லது 20 சதவீதம் எனக் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஆனால்..., இரு நூற்று முற்பத்தி ஒரு மில்லியன் சதவீதத்தினால் (231,000,000%) ஒரு நாட்டின் பணவீக்கம் உயர்ந்தது.......! என்றால் நம்புவீர்களா? இது சிம்பாவே நாட்டில் 2008ம் ஆண்டு ஏற்பட்டுள்ளது
ஒரு நாட்டில் பணவீக்கம் உயர்கின்றது என்றால்... அந்த நாட்டின் பண நிரம்பலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியோ அல்லது வங்கிகள் சட்டப்படி ஒதுக்கி வைக்க வேண்டிய தொகையினை உயர்த்தியோ அல்லது திரைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளின் விற்பனையை அதிகரித்தோ அந்த நாட்டில் பணப் புலக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார சாஸ்திரம் கூறுகின்றது.
அதற்கும் அடங்காவிட்டால் அரசு உடனடியாக களத்தில் இறங்கி அத்தியவசிய பண்டங்கள், சேவைகளை அதிகமாக உற்பத்தி செய்து அல்லது இறக்குமதி செய்து சந்தைக்கு வழங்குவதுடன், விலை உயர்வினை கட்டுப்படுத்தும் சட்டங்களை இறுக்கமாக ஆனால் புத்திசாதுரியத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆனால் இதையே சிம்பாப்வே சனாதிபதி கொஞ்சம் மாத்தி யோசித்தார். பொருட்களின் விலை ஏறுகின்றது என்றால் அவற்றை வாங்க அதிக பணம் தேவை. அதை அரசு அச்சடித்து அதிகமாக இறைத்தது. இதன் விளைவாக மக்களிடம் சிம்பாவே டொலர் அதிகமாக புலங்கியதுடன் அதற்கான மரியாதையும் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மக்கள் எல்லோரும் தமது பணத்தினை வெளிநாட்டு நாணயங்களில் குறிப்பாக ஐ.அ.டொலர்களில் வைத்திருக்க முந்தியடித்தனர்.
விளைவு....? அமெரிக்க டொலருக்கு எதிரான சிம்பாவே டொலரின் பெறுமதி படு மோசமாக வீழ்ச்சி கண்டது. ஒரு இனிப்பு வாங்குவதற்கும் பல ஆயிரம் சிம்பாவே டொலரைக் கொடுக்க வேண்டும். ஒரு குவளை தேனீர் வாங்க ஒரு மூடையில் சிம்பாப்வே டொலர்களை தோளில் சுமந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இந்த மோசமான நிலையினை அவதானித்தசர்வதேச நாணய நிதியம் பல்வேறு புத்திமதிகளைக் கூறியும், அழுத்தங்களை தெரிவித்தும் சிம்பாப்வே நாட்டின் சனாதிபதி றோபேட் முகவே அசராமல் தனது கொள்கையில் உடும்புப்பிடியாக நின்றார். பணம் இல்லையா? தேவையானதை அச்சடியுங்கள்! என்று சிம்பாவே மத்திய வங்கிக்கு தொடர்ந்தும் ஆனையிட்டார்.
பல மில்லியன் டொலர்களை ஒற்றை தாளிலோ அல்லது ஒரு நாணயக் குற்றியிலோ பார்க்கும் சந்தர்பத்தினை உலகிற்கு சிம்பாப்வே அரசு வழங்கியது. இது உலகிற்கு ஆச்சரியத்தினைத் தந்தாலும். சிம்பாப்வே மக்களிற்கு நரக வாழ்வை நிதர்சனமாக்கியிருந்தது.
இத்தனைக்கும் சிம்பாப்வே நாட்டு சனாதிபதி றோபேட் முகாபே ஒரு பாமரனாகவோ அல்லது படிக்காதவனாகவோ இல்லை. இவர் லண்டன் போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து கலைமானி, கல்விமானி, நிர்வாகமானி, சட்டமானி, விஞ்ஞானமானி, முதுநிலை விஞ்ஞானமானி, முதுநிலை சட்டமானி என ஏழு பட்டங்களைப் பெற்ற கல்விமான் என்றால் பாருங்களேன்!
No comments:
Post a Comment